October 17, 2014

உணவுக் கட்டுப்பாடு (Diet Control) - ஒரு இஸ்லாமியக் கண்ணோட்டம்

மிகை உடற்பருமன் (Obesity) - ஒரு பிரதானமான நோய் ஆபத்துக் காரணியாகும்.
மிகை உடற்பருமன் (Obesity) உள்ளவர்கள் பெரும்பாலும் மன அழுத்தம், மூட்டு வியாதி, சில வகையான புற்று நோய்கள், நீரிழிவு நோய், உயர் குருதியமுக்கம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கு ஆளாகக் கூடிய ஆபத்தினை எதிர்நோக்குகின்றனர். உடற்பருமனின் அதிகரிப்பானது உடல் நிறைச் சுட்டி {BMI = உடல் நிறை (Kgஇல்) ÷ (உயரம் × உயரம்) (mஇல்)} இனால் கணிக்கப்படும். தென்னாசிய மக்களைப் பொறுத்தவரையில் BMI>23 எனில் அளவை மீறிய உடற்பருமன் (Overweight) என்றும் BMI>27.5 எனில் மிகை உடற்பருமன் (Obesity) என்றும் கருதப்படும். 18.5 தொடக்கம் 23 வரையிலான BMI நிலையே ஆரோக்கியமான நிலையாகும்.

குறைவாகச் சாப்பிடுவதன் மூலம் உடற்பருமனை (உயரத்துக்கேற்ற நிறையை)ப் பேணிக் கொள்ளுங்கள்.
கூடுதலாகச் சாப்பிடுவது, கொழுப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, குறைவாக வேலை செய்வது போன்றன நமது உடற்பருமனை (உயரத்துக்கேற்ற நிறையை) அதிகரிக்கச் செய்து நமது ஆரோக்கியத்துக்குக் கேடானதாக மாறுகிறது. ஆனால் உணவு விடயத்தில் இஸ்லாத்தின் வரையறைகளைப் பேணி வாழும் இறைநம்பிக்கையாளர்கள் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகமே. நாம் உணவு விடயத்தில் எந்தளவு கட்டுப்பாடாக இருக்க வேண்டும் எனவும், குறைத்துச் சாப்பிடுவதே ஆரோக்கியமானதாகும் எனவும், வயிறு புடைக்கச் சாப்பிடுவது ஒரு இறைநம்பிக்கையாளரின் பண்பாக அமைய முடியாது எனவும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் கீழே விரிவாகப் பார்ப்போம்.

அளவை மீறிச் சாப்பிடாதீர்கள் - அல்-குர்ஆன் வசனத்தின் ஒளியில்:
"உண்ணுங்கள்; பருகுங்கள்; 'இஸ்ராஃப்' செய்யாதீர்கள்; நிச்சயமாக (அல்லாஹ்வாகிய) அவன் 'இஸ்ராஃப்' செய்வோரை நேசிப்பதில்லை." (அல்-குர்ஆன்-7:31). இங்கே 'இஸ்ராஃப்' என்பதன் நேரடிப் பொருள் 'எல்லையை மீறுதல்' என்பதாகும். எல்லையை மீறுதல் பல வகைப்படும். அதில் அளவை மீறிச் சாப்பிடுதலும் ஒரு வகையாகும். இதன் காரணமாகவே அளவை மீறிச் சாப்பிடுதல் அனுமதிக்கத் தக்கதல்ல என மார்க்க அறிஞர்கள் சிலர் எழுதியிருக்கிறார்கள். (பார்க்க: மஆரிபுல் குர்ஆன்-7:31)

வயிறு புடைக்கச் சாப்பிடுவது ஒரு முஃமினுக்கு உகந்த செயல் அல்ல.
வயிறு புடைக்கச் சாப்பிடுவது விரும்பத்தக்கது அல்ல. மேலும் அண்ணலார் (ஸல்) அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை பல்வேறு சமயங்களில் வலியுறுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "ஆதமின் மகன் (மனிதன்) இட்டு நிரப்பக் கூடிய பைகளில் வயிறை விட மோசமானது வேறெதுவுமில்லை. ஆதமின் மகனுக்கு அவனது முதுகை நிமிர்த்தக் கூடிய சில கவளங்களே போதும். அதற்கு மேலும் அவன் உண்டே ஆக வேண்டுமானால் (வயிற்றின்) மூன்றில் ஒரு பாகத்தை தனது உணவுக்காகவும், இன்னொரு மூன்றில் ஒரு பாகத்தை தனது பானத்திற்காகவும், மற்றொரு மூன்றில் ஒரு பாகத்தை தனது சுவாசத்திற்காகவும் அவன் ஒதுக்கிக் கொள்ளவும்." அறிவிப்பவர்: மிக்தாம் இப்னு மஅதீகரிப் (ரலி); நூல்: திர்மிதீ (2380), இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்; இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆகும். (பார்க்க: தப்ஸீர் இப்னு கசீர்-7:31)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சபையிலே ஒரு மனிதர் ஏப்பம் விட்டார். அதற்கு (நபி) அவர்கள் "உமது ஏப்பத்தை எங்களை விட்டும் தடுத்து வைப்பீராக. ஏனெனில், இவ்வுலகில் அதிகம் தனது வயிற்றை நிரப்புபவர்களே மறுமையில் நீண்ட நேரம் பசிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்" எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); நூல்: திர்மிதீ (2015); இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வயிறு நிரம்ப உண்டார்களா?
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுள் முழுவதும் தமது மரணம் வரை எப்பொழுதும் இரண்டு தினங்கள் தொடர்ந்து கேழ்வரகு ரொட்டியையும் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை." அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: திர்மிதீ; (பார்க்க: மௌலானா ஸகரிய்யாவின் சதகாவின் சிறப்பு-பாகம்-6)

"அபூஹுரைரா (ரலி) அவர்கள் (ஒரு நாள்) தம் முன்னே பொறிக்கப்பட்ட ஓர் ஆட்டை(ச் சாப்பிடுவதற்காக) வைத்திருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களை(த் தம்முடன் சாப்பிட வருமாறு) அழைத்தார்கள். ஆனால் அன்னார் அவர்களுடன் சாப்பிட மறுத்து "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டியால் வயிறு நிரம்பாத நிலையிலேயே இந்த உலகிலிருந்து சென்று விட்டார்கள்" என்று கூறினார்கள்." அறிவிப்பவர்: சயீத் (ரஹ்); நூல்:புகாரி-5414

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு உண்டான முதல் பித்அத் வயிறு நிறையச் சாப்பிடுவதுதான். மனிதர்களின் வயிறு நிரம்பி விடும் போது அவர்களின் உள்ளங்கள் உலகின் பக்கம் சாயத் துவங்கி விடுகின்றன." (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

வயிறு புடைக்கச் சாப்பிடுவது உடல் நலத்துக்குக் கேடே.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "வயிறுதான் உடலின் தடாகம் போன்று இருக்கிறது. உடலின் அனைத்து குருதிக் குழாய்களும் நரம்புகளும் அதிலிருந்து பருகுகின்றன. வயிறு சீராக இருக்குமானால் அனைத்து நாளங்களும் அதிலிருந்து ஆரோக்கியமான உணவைப் பருகிச் செல்லும். வயிறு சீர்குலைந்து இருக்குமானால் அனைத்து நாளங்களும் நோய்களைக் காவிக் கொண்டு உடல் முழுதுக்கும் பரவிச் செல்லும்." அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: பைஹகீயின் ஷுஃபுல் ஈமான் (பார்க்க: மஆரிபுல் குர்ஆன்-7:31)

நபி (ஸல்) அவர்கள் விரும்பியது ஒரு நாள் சாப்பிட்டால் மறு நாள் பசித்திருப்பதையே.
அல்லாஹு தஆலா நபி (ஸல்) அவர்களுக்கு மக்கமா நகரத்தின் பூமி முழுவதையும் தங்கமாக்கித் தரப் படும் எனக் கூறிய போது நபியவர்கள்: "யாஅல்லாஹ்! அது வேண்டாம். மாறாக நான் விரும்புவதெல்லாம் ஒரு நாள் சாப்பிட்டால் மறு நாள் பசித்திருப்பதையே. ஏனெனில் பசியோடிருக்கும் அன்று பொறுமை கொண்டு, உனக்கு முன்னால் பணிவு காட்டவும் (உன்னிடம் இறைஞ்சவும்), சாப்பிட்ட அன்று உனக்கு நன்றி செலுத்தவும் செய்வேன்." (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

பசியின் பத்து பலன்கள்:
நாம் உணவு விடயத்தில் இப்படியெல்லாம் கட்டுப்பாடாக இருந்து குறைத்துச் சாப்பிடுவது எப்படி? அடிக்கடி பசிக்குமே. பசியைத் தாங்கிக் கொண்டு எப்படி வாழ்வது? என உங்களுக்குள் கேள்வி வரலாம். ஆனால், பசியுடன் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். பசியின் பலன்கள் பல உண்டு. இதற்குப் பயிற்சியாகவே இஸ்லாம் நமக்கு ரமழானில் ஒரு மாத காலம் பகல் காலங்களில் பசியுடன் இருக்கப் பயிற்சியளிக்கிறது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல; உள்ளத்துக்கு ஒளியும் கூட. அதற்குக் கூலியாக சுவர்க்கத்தில் பதவிகளை அளிக்க அல்லாஹு தஆலா ஏற்பாடு செய்கிறான். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பூரா பசியுடன் கலந்தே கழிந்திருக்கிறது. பசியின் இன்பத்தை அனுபவ ரீதியாகக் கண்டு வாழ்ந்த பெரியார்களின் வரலாறுகளை நீங்கள் படித்ததில்லையா?

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பசித்திருப்பத்தால் கிடைக்கும் பத்து பலன்கள் பற்றி கூறுகிறார்கள். அதன் சுருக்கமாவது: பட்டினியால் வாடும் ஏழைகளின் பக்கம் மறதி உண்டாவதில்லை; நோய்களை விட்டும் தவிர்த்து, ஆரோக்கியத்தை அளிக்கிறது; உள்ளம் பரிசுத்தம் அடைந்து, புத்தி கூர்மையடைகிறது; உள்ளம் இளகி நெகிழ்ந்து திக்ரிலும், துஆவிலும் இன்பம் உருவாகிறது; பணிவு, தாழ்மை போன்ற அருங் குணங்கள் உருவாகி அகந்தை, மமதை போன்ற குணங்கள் அகழ்கின்றன; இச்சைகளை முறியடித்து, பாவங்களிலிருந்து தடுக்கிறது; குறைவாகவே உறக்கம் ஏற்படும்; சோம்பல் நீங்குகிறது; செலவில் சிக்கனம் ஏற்படுகிறது; பிறரை முற்படுத்தல், இரக்கம் காட்டுதல், தர்மம் அளித்தல் போன்றனவற்றுக்கு வழிவகுக்கிறது. (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

உணவுக் கட்டுப்பாட்டுக்கு சுவர்க்கத்தில் பதவிகள் உண்டு.
ஒரு ஹதீஸில் வருவதாவது, "ஒரு மனிதன் உலகில் உணவு குடிப்பின் அளவைக் குறைத்துக் கொள்வானேயானால் அல்லாஹு தஆலா பெருமையாக மலக்குகளிடம் "பாருங்கள்! நான் இவனை உணவிலும், பானத்திலும் நெருக்கடியில் ஆழ்த்தினேன். அதன் மீது இவன் பொறுமையைக் கைகொண்டான். எந்தக் கவளத்தை இவன் குறைத்துக் கொண்டானோ அதற்குப் பதிலாக சுவர்க்கத்தில் பதவிகளை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்" என்று கூறுகிறான்." (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

மற்றொரு ஹதீஸில் வருவதாவது, "எவர்கள் உலகில் பசித்திருப்பார்களோ அவர்கள்தாம் மறுமையில் வயிறு நிரம்ப உண்ணக் கூடியவர்கள். அஜீரணமாகும் அளவு வயிறு புடைக்க சாப்பிடும் மனிதனே அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானவன். ஒருவர் தனது மனம் சாப்பிட விரும்பும் ஒரு வஸ்துவை சாப்பிடாமல் தவிர்ப்பாரானால் அவருக்காக சுவர்க்கத்தில் பதவிகள் இருக்கின்றன." (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

உணவுக் கட்டுப்பாட்டுக்கான சிறந்த வழி - நோன்பு ஆகும்.
ரமலான் மாதம் என்றால் அது உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம் ஆகும். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் வென்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே. நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாகத் திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்து தனது ஆசைகளை அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கண்ட கண்ட உணவுகளையும் கட்டுப்பாடில்லாமல் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

கடமையான மற்றும் சுன்னத்தான நோன்புகள் மூலம் உணவுக் கட்டுப்பாடு - ஒரு சிறந்த யுக்தியாகும்.
அவையாவன: வருடாந்தம் ரமழான் மாத நோன்புகள், முஹர்ரம் மாதத்தில் நோன்பு வைத்தல், ஷஃபான் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் நோன்பு வைத்தல், துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் நோன்பு வைத்தல், ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் வைத்தல், திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைத்தல், ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகள் வைத்தல், அய்யாமுல் பீல் நோன்புகள் (ஒவ்வொரு மாதத்திலும் பிறை 12,13,14 அல்லது 13,14,15), அரபா நோன்பு (துல்ஹஜ் பிறை 9), தாஸூஆ, ஆஷூரா நோன்பு (முஹர்ரம் பிறை 9,10) (பார்க்க: ரியாளுஸ் ஸாலிஹீன் - 1246-1263)

நோன்பின் சிறப்பு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹு தஆலா கூறுகிறான்: "ஆதமுடைய மகனின் அமல்கள் அனைத்தும் நோன்பைத் தவிர அவனுக்குரியவையாக உள்ளன. நிச்சயமாக நோன்பு எனக்குரியதாக இருக்கிறது. நானே அதற்குக் கூலி கொடுக்கிறேன்." அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி, முஸ்லிம்; (ரியாளுஸ் ஸாலிஹீன் - 1215)

சுருங்கக்கூறின் நம் ஆரோக்கியமான வாழ்விற்கும் இறை வழிபாட்டை இலகுவாக நிறைவேற்றுவதற்கும் அண்ணலார் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும். பசிக்காக சாப்பிட வேண்டும்; சாப்பிடுவதற்காக பசிக்கக் கூடாது. பசி அடங்கிவிட்டால் உண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கு சில கவள உணவுகள் நமக்கு போதுமாகும்; உண்பதற்காகத்தான் வாழ்க்கை என்றாகி விடக் கூடாது. அண்ணலார் (ஸல்) அவர்களின் அருமையான வாழ்வுதனை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழ்வதோடு அளவற்ற முறையில் இபாதத் செய்யக் கூடியவர்களாகவும் அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.

தொகுப்பு:
Dr. A.A.M. Yasir (Aasir) (MBBS),
Mobile: 0776470252

No comments:

Post a Comment