கொடிய நீரிழிவு நோயிலிருந்து தப்பிப்போம் - ஒரு இஸ்லாமியக் கண்ணோட்டம்

கொடிய நீரிழிவு நோயிலிருந்து தப்பிப்போம் - ஒரு இஸ்லாமியக் கண்ணோட்டம்

நீரிழிவு நோய் (Diabetes Mellitus) - அறிமுகம்

நீரிழிவு நோய் (Diabetes Mellitus) என்றால் என்ன?
எமது உடலிலுள்ள இன்சுலினின் அளவு குறைவடைந்து அல்லது அது சரியாக தொழிற்படாமல் இருந்து அதன் மூலம் குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதே நீரிழிவு நோய் எனப்படும். இது இரண்டு வகைப்படும்: டைப்-1 மற்றும் டைப்-2.

டைப்-1 எனப்படும் நீரிழிவு மிகவும் சிறு வயதில் ஏற்படும். இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 10% நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

டைப்-2 எனப்படும் நீரிழிவு பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்படும். உடற்பருமன் (உயரத்துக்கேற்ற நிறை) அதிகரிக்கும் போது கொழுப்பு அதிகரிப்பதால் படிப்படியாக இன்சுலின் குறைவடைந்து அதன் மூலமாக ஏற்படும். கிட்டத்தட்ட 90% நீரிழிவு நோயாளிகள் வகை இரண்டினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள். இந்த வகை நீரழிவை உணவுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் நிறையைக் குறைத்து உடற்பருமனைக் குறைப்பதன் மூலம் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.(1)(5)

நீரிழிவு நோய் - ஒரு உயிர் கொல்லி.
இன்று உலகில் உயிரைக் காவும் கொடிய நோய்களில் நீரிழிவு நோயானது பிரதான ஒரு இடத்தினை வகிக்கிறது. இந் நோயினால் பார்வை இழப்பு, கால்களை இழத்தல், மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம் மற்றும் கோமா போன்றன ஏற்பட்டு மனிதனை மரணம் வரை கொண்டு செல்கிறது.(1)(5)

நீரிழிவு நோய்ப் பரவல் தென்னாசியாவில் மிகை.
உலகின் மொத்த நீரிழிவு நோயாளர்களில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலேயே மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.(2) அதிலும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற தென்னாசிய பிரதேசத்து மக்கள் கூடிய சதவிகிதத்தில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப் பிரதேசத்து மக்கள் இது பற்றிய கூடுதல் கவனம் எடுக்கக் கடமைப் பட்டுள்ளனர். (1)(4)(5)

டைப்-2 நீரிழிவு நோயின் நவீன போக்கு - மடங்கு அதிகரிப்பு:
இலங்கையைப் பொறுத்த வரை 1990ல் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் 2.5% மக்களே இந் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் 2005ஆம் ஆண்டு 14% ஆக அதிகரித்தது. தற்பொழுது (2013) 20% மக்கள் அதாவது ஒவ்வொரு ஐந்து பேரிலும் ஒருவர் பாதிக்கப் பட்டிருப்பாதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.(2)(3)
உலகளவில் 2010ல் நூற்று இருபது மில்லியன் அளவில் மதிப்பிடப்பட்ட இன் நோயாளர்களின் எண்ணிக்கையானது 2030ல் மேலும் மூன்று மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.(1) மேலும் முன்னர் பொதுவாக 60 அல்லது 70 வயதுகளில் ஏற்படும் நீரிழிவு தற்போது குறைந்த வயதில் ஏற்படுகிறது. முற் காலத்தில் 40 வயதில் ஏற்பட்டு 30 வயதில் ஏற்பட்டு இப்போது 20 வயதுடையோருக்கும் ஏற்படுகிறது.(4)(5)
ஏனெனில் தற்கால மனிதர்களின் வாழ்க்கைமுறை பெருமளவில் வேறுபட்டு வருகிறது. அதாவது முன் வாழ்ந்தவர்கள் குறைவாகச் சாப்பிட்டு கூடுதலாக வேலை செய்தனர். அனால் இன்றைய மக்களின் நிலையோ அனைத்து வேலைகளையும் இயந்திரக் கருவிகளின் துணையிலேயே செய்து முடித்தல், பக்கத்து வீதிக்குப் போவதானாலும் வாகனம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளல் அத்துடன் தொலைகாட்சி பார்த்தல், கணனிக்கு முன்னால் உட்கார்ந்து நேரத்தைக் கழித்தல் இதன்போது இடையிடையே எதாவது சிற்றுண்டிகள் கொறித்தல், குடிபானங்கள் அருந்துதல் போன்ற நவீன வாழ்க்கைமுறைகள் மற்றும் மக்கள்தொகை முதுமையடைவது போன்றன இந் நோயின் மடங்கு அதிகரிப்புக்கு அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன.(1)(4)(5)
டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்துக்குள்ளானவர்கள் யாவர்?
·        45 வயதுக்கு மேற்பட்டவர்கள்
·        பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள்
·        புகைப்பவர்கள்
·        உடற்பருமன்  (உயரத்துக்கேற்ற நிறை) அதிகமாக இருப்பவர்கள்

உடற்பருமனின் அதிகரிப்பானது உடல் நிறைச் சுட்டி {BMI = உடல் நிறை (Kgஇல்) ÷ (உயரம் × உயரம்) (mஇல்)} இனால் கணிக்கப்படும். BMI>25 எனில் அளவை மீறிய உடற்பருமன் (Overweight) என்றும் BMI>30 எனில் மிகை உடற்பருமன் (Obesity) என்றும் அழைக்கப்படும். BMI = 18.5 தொடக்கம் 25 வரையிலானா நிலையே ஆரோக்கியமான நிலையாகும்.(1)

டைப்-2 நீரிழிவு நோயைத் தடுக்கலாமா?
டைப்-2 நீரிழிவு நோயானது ஏற்பட்டால் குணப்படுத்த முடியாது. ஆனால் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம். இதற்காக,
·        புகைத்தலை முற்றாகத் தவிர்த்து விட வேண்டும்.
·        உடற்பருமனை (உயரத்துக்கேற்ற நிறையை) ஆரோக்கியமான நிலையில் (BMI = 18.5 - 25) வைத்துப் பேண வேண்டும். இதற்கு,
Þ    குறைவாகச் சாப்பிட வேண்டும்;
Þ    கொழுப்புச் சாப்பாடுகளைக் குறைக்க வேண்டும்;
Þ    கூடுதலாக வேலை செய்ய வேண்டும்.(1)(5)(6)


நீரிழிவு நோயைத் தவிர்க்க புகைத்தலை முற்றாகக் கைவிடல் வேண்டும்.
சிகரெட், பீடி, சுருட்டு என்ற அனைத்து வகைப் புகைத்தலும் ஹறாம்!” என்பது இஸ்லாமிய உலக அறிஞர்கள் அனைவரினதும் ஏகோபித்த முடிவாகும்.  அதற்கான காரணங்களாக பின்வருவனவற்றை ஆதாரங்களோடு முன்வைக்கின்றனர்.(7)

1.       புகைத்தல் ஒரு கெட்ட நடத்தை ஆகும்.
நபி (ஸல்) அவர்களது பணிகள் பற்றி அல்லாஹ் கூறும் போது,
அவர் தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கித் தீயவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். (அல்-குர்ஆன்-7:157)

2.       புகைத்தல் உடல் நலனுக்குக் கேடு ஆகும்.
“(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.அவ்விரண்டிலும் பெரும் கேடும், மனிதர்களுக்குச் (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப் பெரியதாகும்!எனக் கூறுவீராக!(அல்-குர்ஆன்-2:219)

3.       புகைத்தல் தற்கொலைக்கு நிகர் ஆகும்.
"மேலும், அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள்!" (அல்-குர்ஆன்-2:195)
"மேலும், உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள்." (அல்-குர்ஆன்-4:29)

4.       புகைத்தல் வீண்விரயம் ஆகும்.
நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். ஷைத்தானோ தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.(அல்-குர்ஆன்-17:27)

நாளை மறுமையில் ஒவ்வொரு மனிதனதும் பணத்தைத் தான் எப்படிச் சம்பாதித்தேன்? எந்த வழியில் செலவழித்தேன்? என்று கணக்குக் காட்ட வேண்டும்.

5.       புகைத்தல் பிறருக்குத் தொல்லை தருகிறது.
நல்ல முஸ்லிம் யார்?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “தன் கையாலோ, நாவாலோ பிறருக்குத் தீங்கிழைக்காதவனே சிறந்த முஸ்லிம்!என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

வெங்காயம், வெள்ளைப்பூடு என்பவற்றைப் பச்சையாக உண்டவர், பல் துலக்காமல் பள்ளிக்கு வர வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (புகாரி)

ஏனெனில், வெங்காயம், வெள்ளைப்பூடு சாப்பிட்டால் வாயில் வாடை வரும். அந்த வாடை அருகில் தொழுபவர்களுக்கு மட்டுமன்றி மலக்குகளுக்குக் கூட அவை வெறுப்பை உண்டுபண்ணுவதாகக் கூறினார்கள். அனுமதிக்கப்பட்ட வெங்காயம், வெள்ளைப்பூட்டின் நிலையே இதுவென்றால் சிகரெட்டின் நிலை என்னவென்று நிதானமாகச் சிந்தியுங்கள்!(7)

புகைப்பவர்கள் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்துக்குள்ளானவர்கள் ஆவார்கள் என நாம் மேலே குறிப்பிட்டோம். அது மட்டுமல்லாமல் உயர்குருதியுக்கம், மாரடைப்பு, புற்று நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கும் ஆளாகும் ஆபத்து அவர்களுக்கு உண்டு. ஆனால் புகைத்தல் பற்றிய இஸ்லாத்தின் வரையறைகளைப் பேணி வாழும் இறைநம்பிக்கையாளர்கள் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகமே.


நீரிழிவு நோயைத் தவிர்க்க உணவுக் கட்டுப்பாடு அவசியமாகும்.
அளவை மீறிச் சாப்பிடாதீர்கள் - அல்-குர்ஆன் வசனத்தின் ஒளியில்:
"உண்ணுங்கள்; பருகுங்கள்; 'இஸ்ராஃப்' செய்யாதீர்கள்; நிச்சயமாக (அல்லாஹ்வாகிய) அவன் 'இஸ்ராஃப்' செய்வோரை நேசிப்பதில்லை." (அல்-குர்ஆன்-7:31)

இங்கே 'இஸ்ராஃப்' என்பதன் நேரடிப் பொருள் 'எல்லையை மீறுதல்' என்பதாகும். எல்லையை மீறுதல் பல வகைப்படும். அதில் அளவை மீறிச் சாப்பிடுதலும் ஒரு வகையாகும். இதன் காரணமாகவே அளவை மீறிச் சாப்பிடுதல் அனுமதிக்கத் தக்கதல்ல என மார்க்க அறிஞர்கள் சிலர் எழுதியிருக்கிறார்கள். (பார்க்க: மஆரிபுல் குர்ஆன்-7:31)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "நீ விரும்பிய அனைத்தையும் உண்பது கூட 'இஸ்ராஃப்'தான்." அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்: இப்னு மாஜா, தாரகுத்னீ; இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானதாகும் (சிந்தீ); இது ஃகரீபான ஹதீஸாகும் (தாரகுத்னீ). (பார்க்க: தப்ஸீர் இப்னு கசீர்-7:31; மஆரிபுல் குர்ஆன்-7:31)

வயிறு புடைக்கச் சாப்பிடுவது ஒரு முஃமினுக்கு உகந்த செயல் அல்ல.
வயிறு புடைக்கச் சாப்பிடுவது விரும்பத்தக்கது அல்ல. மேலும் அண்ணலார் (ஸல்) அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை பல்வேறு சமயங்களில் வலியுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "ஆதமின் மகன் (மனிதன்) இட்டு நிரப்பக் கூடிய பைகளில் வயிறை விட மோசமானது வேறெதுவுமில்லை. ஆதமின் மகனுக்கு அவனது முதுகை நிமிர்த்தக் கூடிய சில கவளங்களே போதும். அதற்கு மேலும் அவன் உண்டே ஆக வேண்டுமானால் (வயிற்றின்) மூன்றில் ஒரு பாகத்தை தனது உணவுக்காகவும், இன்னொரு மூன்றில் ஒரு பாகத்தை தனது பானத்திற்காகவும், மற்றொரு மூன்றில் ஒரு பாகத்தை தனது சுவாசத்திற்காகவும் அவன் ஒதுக்கிக் கொள்ளவும்." அறிவிப்பவர்: மிக்தாம் இப்னு மஅதீகரிப் (ரலி); நூல்: திர்மிதீ (2380), இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்; இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆகும். (பார்க்க: தப்ஸீர் இப்னு கசீர்-7:31)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சபையிலே ஒரு மனிதர் ஏப்பம் விட்டார். அதற்கு (நபி) அவர்கள் "உமது ஏப்பத்தை எங்களை விட்டும் தடுத்து வைப்பீராக. ஏனெனில், இவ்வுலகில் அதிகம் தனது வயிற்றை நிரப்புபவர்களே மறுமையில் நீண்ட நேரம் பசிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்" எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); நூல்: திர்மிதீ (2015); இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆகும்.

"ஒரு மனிதர் அதிகமான அளவில் சாப்பிட்டு வந்தார். அவர் (ஒரு நாள்) இஸ்லாத்தை ஏற்றார். அன்றிலிருந்து அவர் குறைவாக உண்ணும் பழக்கமுடையவராகி விட்டார். இந்த நபரின் இந்த மாற்றம் குறித்து அண்ணலார் (ஸல்) அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் "இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறை மறுப்பாளரோ ஏழு குடல்களில் சாப்பிடுவார்" என்று கூறினார்கள்." அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி-5397

இந்த ஹதீஸிற்கு விளக்கம் இவ்வாறு எழுதப்படுகிறது. அதாவது இறை மறுப்பாளர் தன் மனம் விரும்பும் எல்லா உணவுகளையும் விதிவிலக்கில்லாமல் புசிப்பார். ஆனால், இறைநம்பிக்கையாளர் அனுமதிக்கப்பட்ட உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவார். அப்போது தான் இபாதத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும், அதிகமாக உண்பதால் ஏற்படும் இடையூறுகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் அவருக்கு இலகுவாயிருக்கும். (நூல்: ஃபத்ஹுல் பாரி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வயிறு நிரம்ப உண்டார்களா?
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுள் முழுவதும் தமது மரணம் வரை எப்பொழுதும் இரண்டு தினங்கள் தொடர்ந்து கேழ்வரகு ரொட்டியையும் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை." அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: திர்மிதீ; (பார்க்க: மௌலானா ஸகரிய்யாவின் சதகாவின் சிறப்பு-பாகம்-6)

"அபூஹுரைரா (ரலி) அவர்கள் (ஒரு நாள்) தம் முன்னே பொறிக்கப்பட்ட ஓர் ஆட்டை(ச் சாப்பிடுவதற்காக) வைத்திருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களை(த் தம்முடன் சாப்பிட வருமாறு) அழைத்தார்கள். ஆனால் அன்னார் அவர்களுடன் சாப்பிட மறுத்து "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டியால் வயிறு நிரம்பாத நிலையிலேயே இந்த உலகிலிருந்து சென்று விட்டார்கள்" என்று கூறினார்கள்." அறிவிப்பவர்: சயீத் (ரஹ்); நூல்:புகாரி-5414

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு உண்டான முதல் பித்அத் வயிறு நிறையச் சாப்பிடுவதுதான். மனிதர்களின் வயிறு நிரம்பி விடும் போது அவர்களின் உள்ளங்கள் உலகின் பக்கம் சாயத் துவங்கி விடுகின்றன." (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

வயிறு புடைக்கச் சாப்பிடுவது உடல் நலத்துக்குக் கேடே.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "வயிறுதான் உடலின் தடாகம் போன்று இருக்கிறது. உடலின் அனைத்து குருதிக் குழாய்களும் நரம்புகளும் அதிலிருந்து பருகுகின்றன. வயிறு சீராக இருக்குமானால் அனைத்து நாளங்களும் அதிலிருந்து ஆரோக்கியமான உணவைப் பருகிச் செல்லும். வயிறு சீர்குலைந்து இருக்குமானால் அனைத்து நாளங்களும் நோய்களைக் காவிக் கொண்டு உடல் முழுதுக்கும் பரவிச் செல்லும்." அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: பைஹகீயின் ஷுஃபுல் ஈமான் (பார்க்க: மஆரிபுல் குர்ஆன்-7:31)

சாப்பிடுவதை பொழுது போக்காக ஆக்கி விடாதீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் (சில சமயங்களில்) காலையில் சாப்பிட்டால் மாலையில் சாப்பிடமாட்டார்கள். மேலும், மாலையில் சாப்பிட்டால் காலையில் சாப்பிடமாட்டார்கள். நூல்: ஜாமியுஸ் சஃகீர்; (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

குறைவாகச் சாப்பிடும் பழக்கம் வர இதோ நபி (ஸல்) அவர்கள் கூறும் ஒரு யுக்தி.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "ஒருவருக்கான உணவு இருவருக்குப் போதுமானதாகும்." அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: முஸ்லிம் (4182)

"இருவருக்கான உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவருக்கான உணவு நால்வருக்குப் போதுமானதாகும்" அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி (5392)

விளக்கம் என்னவெனில் ஒருவர் வயிறார சாப்பிடும் உணவு இருவர் பகிர்ந்து உண்ணலாம். இருவர் வயிறார உண்ணும் உணவு மூவர் பகிர்ந்து சாப்பிட போதுமானதாகும். இவ்வாறு பகிர்ந்து உண்பதில் பரக்கத் ஏற்படுவதோடு அளவோடு உண்பதால் ஆரோக்கியமும் ஏற்படுகிறது.

குறைவாகச் சாப்பிடுவதன் மூலம் உடற்பருமனை (உயரத்துக்கேற்ற நிறையை)ப் பேணிக் கொள்ளுங்கள்.
கூடுதலாகச் சாப்பிடுவது, கொழுப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, குறைவாக வேலை செய்வது போன்றன நமது உடற்பருமனை (உயரத்துக்கேற்ற நிறையை) அதிகரிக்கச் செய்து நமது ஆரோக்கியத்துக்குக் கேடானதாக மாறுகிறது. உடற்பருமன்  அதிகமாக இருப்பவர்கள் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்துக்குள்ளானவர்கள் ஆவார்கள் என நாம் மேலே குறிப்பிட்டோம். அது மட்டுமல்லாமல் உயர்குருதியுக்கம், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கும் ஆளாகும் ஆபத்து அவர்களுக்கு உண்டு.

ஆனால் உணவு விடயத்தில் இஸ்லாத்தின் வரையறைகளைப் பேணி வாழும் இறைநம்பிக்கையாளர்கள் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகமே. நாம் உணவு விடயத்தில் எந்தளவு கட்டுப்பாடாக இருக்க வேண்டும் எனவும், குறைத்துச் சாப்பிடுவதே ஆரோக்கியமானதாகும் எனவும், விரும்பிய அனைத்தையும் உண்பது, வயிறு புடைக்கச் சாப்பிடுவது, சாப்பிடுவதையே பொழுது போக்காக ஆக்கி விடுவது போன்றன ஒரு இறைநம்பிக்கையாளரின் பண்பாக அமைய முடியாது எனவும் மேலே எடுத்துக் காட்டப்பட்ட ஹதீஸ்களை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது நமக்குத் தெளிவாகிறது.

நபி (ஸல்) அவர்கள் விரும்பியது ஒரு நாள் சாப்பிட்டால் மறு நாள் பசித்திருப்பதையே.
அல்லாஹு தஆலா நபி (ஸல்) அவர்களுக்கு மக்கமா நகரத்தின் பூமி முழுவதையும் தங்கமாக்கித் தரப் படும் எனக் கூறிய போது நபியவர்கள்: "யாஅல்லாஹ்! அது வேண்டாம். மாறாக நான் விரும்புவதெல்லாம் ஒரு நாள் சாப்பிட்டால் மறு நாள் பசித்திருப்பதையே. ஏனெனில் பசியோடிருக்கும் அன்று பொறுமை கொண்டு, உனக்கு முன்னால் பணிவு காட்டவும் (உன்னிடம் இறைஞ்சவும்), சாப்பிட்ட அன்று உனக்கு நன்றி செலுத்தவும் செய்வேன்." (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

மற்றொரு ஹதீஸில் வருவதாவது, "ஆயிஷாவே! எவனுடைய கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நான் எனது இறைவனிடம் தங்க மலைகள் என்னைப் பின் தொடர்ந்து வர வேண்டும் என்று இறைஞ்சினால் அல்லாஹ் அவ்வாறு அவற்றை என்னுடன் நடத்தாட்டுவான். ஆனால் நான் உலகில் வயிறு நிரம்பி இருப்பதை விட பசித்திருப்பதையே தேத்ர்ந்தெடுத்துக் கொண்டேன்." (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

மற்றொரு ஹதீஸில் வருவதாவது, "ஒரு சமயம் பாத்திமா (ரலி) அவர்கள் ஒரு ரொட்டித் துண்டுடன் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இது என்ன? என வினவ, பாத்திமா (ரலி) அவர்கள் "ய ரஸூலல்லாஹ்! இன்று ரொட்டி சமைத்தேன். தாங்கள் சாப்பிடாது நான் மட்டும் சாப்பிட என மனம் இணங்கவில்லை" எனக் கூற, நபி (ஸல்) அவர்கள், "மூன்று நாட்களுக்குப் பிறகு உனது தந்தையின் வாய்க்குள் செல்லும் முதல் உணவு இதுதான்" என்றார்கள்." (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

மற்றொரு ஹதீஸில் வருவதாவது, "நபி (ஸல்) அவர்கள் அதிகமான சமயங்களில் பசியோடு இருப்பார்கள். ஒன்றும் கிடைக்காததால் அப்படி பட்டினியாக இருந்தார்கள் என்றில்லை. உணவு இருந்த போதிலும் நபி (ஸல்) அவர்கள் மிகக் குறைவாகவே உண்ணக் கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில் பசியோடு இருப்பதால் அதிகமான ஒளி கிடைக்கிறது." (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

பசியின் பத்து பலன்கள்:
நாம் உணவு விடயத்தில் இப்படியெல்லாம் கட்டுப்பாடாக இருந்து குறைத்துச் சாப்பிடுவது எப்படி? அடிக்கடி பசிக்குமே. பசியைத் தாங்கிக் கொண்டு எப்படி வாழ்வது? என உங்களுக்குள் கேள்வி வரலாம். ஆனால், பசியுடன் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். பசியின் பலன்கள் பல உண்டு. இதற்குப் பயிற்சியாகவே இஸ்லாம் நமக்கு ரமழானில் ஒரு மாத காலம் பகல் காலங்களில் பசியுடன் இருக்கப் பயிற்சியளிக்கிறது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல; உள்ளத்துக்கு ஒளியும் கூட. அதற்குக் கூலியாக சுவர்க்கத்தில் பதவிகளை அளிக்க அல்லாஹு தஆலா ஏற்பாடு செய்கிறான். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பூரா பசியுடன் கலந்தே கழிந்திருக்கிறது. பசியின் இன்பத்தை அனுபவ ரீதியாகக் கண்டு வாழ்ந்த பெரியார்களின் வரலாறுகளை நீங்கள் படித்ததில்லையா?

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பசித்திருப்பத்தால் கிடைக்கும் பத்து பலன்கள் பற்றி கூறுகிறார்கள். அதன் சுருக்கமாவது:
1.       பட்டினியால் வாடும் ஏழைகளின் பக்கம் மறதி உண்டாவதில்லை.
2.       நோய்களை விட்டும் தவிர்த்து, ஆரோக்கியத்தை அளிக்கிறது.
3.       உள்ளம் பரிசுத்தம் அடைந்து, புத்தி கூர்மையடைகிறது.
4.       உள்ளம் இளகி நெகிழ்ந்து திக்ரிலும், துஆவிலும் இன்பம் உருவாகிறது.
5.       பணிவு, தாழ்மை போன்ற அருங் குணங்கள் உருவாகி அகந்தை, மமதை போன்ற குணங்கள் அகழ்கின்றன.
6.       இச்சைகளை முறியடித்து, பாவங்களிலிருந்து தடுக்கிறது.
7.       குறைவாகவே உறக்கம் ஏற்படும்.
8.       சோம்பல் நீங்குகிறது.
9.       செலவில் சிக்கனம் ஏற்படுகிறது.
10.     பிறரை முற்படுத்தல், இரக்கம் காட்டுதல், தர்மம் அளித்தல் போன்றனவற்றுக்கு வழிவகுக்கிறது. (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

உணவுக் கட்டுப்பாட்டுக்கு சுவர்க்கத்தில் பதவிகள் உண்டு.
ஒரு ஹதீஸில் வருவதாவது, "ஒரு மனிதன் உலகில் உணவு குடிப்பின் அளவைக் குறைத்துக் கொள்வானேயானால் அல்லாஹு தஆலா பெருமையாக மலக்குகளிடம் "பாருங்கள்! நான் இவனை உணவிலும், பானத்திலும் நெருக்கடியில் ஆழ்த்தினேன். அதன் மீது இவன் பொறுமையைக் கைகொண்டான். எந்தக் கவளத்தை இவன் குறைத்துக் கொண்டானோ அதற்குப் பதிலாக சுவர்க்கத்தில் பதவிகளை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்" என்று கூறுகிறான்." (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

மற்றொரு ஹதீஸில் வருவதாவது, "எவர்கள் உலகில் பசித்திருப்பார்களோ அவர்கள்தாம் மறுமையில் வயிறு நிரம்ப உண்ணக் கூடியவர்கள். அஜீரணமாகும் அளவு வயிறு புடைக்க சாப்பிடும் மனிதனே அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானவன். ஒருவர் தனது மனம் சாப்பிட விரும்பும் ஒரு வஸ்துவை சாப்பிடாமல் தவிர்ப்பாரானால் அவருக்காக சுவர்க்கத்தில் பதவிகள் இருக்கின்றன." (பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)

உணவுக் கட்டுப்பாட்டுக்கான சிறந்த வழி - நோன்பு ஆகும்.

நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாகத் திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்து தனது ஆசைகளை அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கண்ட கண்ட உணவுகளையும் கட்டுப்பாடில்லாமல் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

கடமையான நோன்புகள்:
வருடாந்தம் ரமழான் மாத நோன்புகள்

சுன்னத்தான நோன்புகள்:
·        முஹர்ரம் மாதத்தில் நோன்பு வைத்தல் (ரியாளுஸ் ஸாலிஹீன் - 1246)
·        ஷஃபான் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் நோன்பு வைத்தல் (ரியாளுஸ் ஸாலிஹீன் - 1247)
·        துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் நோன்பு வைத்தல் (ரியாளுஸ் ஸாலிஹீன் - 1249)
·        ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் வைத்தல் (ரியாளுஸ் ஸாலிஹீன் - 1254)
·        திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைத்தல் (ரியாளுஸ் ஸாலிஹீன் - 1255; 1256; 1257)
·        ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகள் வைத்தல் (ரியாளுஸ் ஸாலிஹீன் - 1258; 1259; 1260; 1261)
·        அய்யாமுல் பீல் நோன்புகள் (ஒவ்வொரு மாதத்திலும் பிறை 12,13,14 அல்லது 13,14,15) (ரியாளுஸ் ஸாலிஹீன் - 1262, 1263, 1264)
·        அரபா நோன்பு (துல்ஹஜ் பிறை 9) (ரியாளுஸ் ஸாலிஹீன் - 1250)
·        தாஸூஆ, ஆஷூரா நோன்பு (முஹர்ரம் பிறை 9,10) (ரியாளுஸ் ஸாலிஹீன் - 1251; 1252; 1253)

நோன்பின் சிறப்பு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹு தஆலா கூறுகிறான்: "ஆதமுடைய மகனின் அமல்கள் அனைத்தும் நோன்பைத் தவிர அவனுக்குரியவையாக உள்ளன. நிச்சயமாக நோன்பு எனக்குரியதாக இருக்கிறது. நானே அதற்குக் கூலி கொடுக்கிறேன்." அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி, முஸ்லிம்; (ரியாளுஸ் ஸாலிஹீன் - 1215)

சுருங்கக்கூறின் நம் ஆரோக்கியமான வாழ்விற்கும் இறை வழிபாட்டை இலகுவாக நிறைவேற்றுவதற்கும் அண்ணலார் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும். பசிக்காக சாப்பிட வேண்டும்; சாப்பிடுவதற்காக பசிக்கக் கூடாது. பசி அடங்கிவிட்டால் உண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கு சில கவள உணவுகள் நமக்கு போதுமாகும்; உண்பதற்காகத்தான் வாழ்க்கை என்றாகி விடக் கூடாது. அண்ணலார் (ஸல்) அவர்களின் அருமையான வாழ்வுதனை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழ்வதோடு அளவற்ற முறையில் இபாதத் செய்யக் கூடியவர்களாகவும் அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.


நீரிழிவு நோயைத் தவிர்க்க கூடுதலாக வேலை செய்ய வேண்டும்.
தற்கால மனிதர்களின் வாழ்க்கைமுறை பெருமளவில் வேறுபட்டு வருகிறது. அதாவது முன் வாழ்ந்தவர்கள் குறைவாகச் சாப்பிட்டு கூடுதலாக வேலை செய்தனர். அனால் இன்றைய மக்களின் நிலையோ கூடுதலாகச் சாப்பிடுவதுடன் அனைத்து வேலைகளையும் இயந்திரக் கருவிகளின் துணையிலேயே செய்து முடிகின்றனர். பக்கத்து வீதிக்குப் போவதானாலும் வாகனம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். இதனால் நீரிழிவு நோயானது தற்போது முன்னரை விட குறைந்த வயதில் ஏற்படுகிறதுடன் பல மடங்காக அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

இறைநம்பிக்கையாளரின் ஒவ்வொரு நற் செயலும் தர்மமாகும்.
ngUkhdhH (]y;) mtHfs; mUsdpdhHfs;: kdpjHfspd; xt;nthU %l;Lk; xt;nthU ehSk; VjhtJ xU jHkj;ij nra;jhf Ntz;Lk;. ,U kdpjHfSf;fpilapy; epahakhf ele;J nfhs;tJ xU jHkkhFk;. thfdj;jpd; kPJ VWfpd;w xUtiu mjd; kPJ Vw;wp tpLtJ xU jHkkhFk;. mJNghyNt mjd; kPJ mtUila Rikfis Vw;wp tpLtJk; xU jHkkhFk;. xU ey;y thHj;ij NgRtJk; xU jHkkhFk;. njhOiff;fhf ePq;fs; vLj;J itf;Fk; xt;nthU mbAk; xU jHkkhFk;. CW tpistpf;ff; $ba nghUnshd;iw eilghijapypUe;J mg;Gwg;gLj;JtJk; xU jHkkhFk;.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி);  நூல்: புகாரி, முஸ்லிம் (பார்க்க: அரபஊனன் நபவிய்யா-26)

தொழுகைக்காக நடந்து செல்வதன் சிறப்பு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் நல்ல முறையில் வுளூ செய்து பின் தொழச் சென்றால், அவர் ஒவ்வொரு முறை தனது வலது காலை உயர்த்தும் போதும் அல்லாஹு தஆலா அவருக்கு ஒரு நன்மையை எழுதுகிறான். அவர் எடுத்து வைக்கும் இடது பாதத்துடைய ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு தீமையை அழிக்கிறான்." நூல்: அபூதாவூத் (முன்தகப் அஹாதீஸ் 2:2:73)

நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்க நாம் எந்தளவு முடியுமோ அந்தளவு கூடுதலாக வேலைகளைச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். மேலே கூறியவாறு ஒரு இறை நம்பிக்கையாளரின் அனைத்து வித நற் செயல்களுக்குமான முழுமையான கூலியை அல்லாஹ்விடம் ஆதரவு வைத்து, நன்மையை நாடி, நமது அன்றாட வாழ்வில் செய்யும் பல வேலைகளையும் இறை சிந்தனையுடன் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் அனைத்து விதமான கொடிய நோய்களிலிருந்தும் பாதுகாப்பானாக.

தொகுப்பு:
Dr. A.A.M. Yasir (Aasir) (MBBS),
Mobile: 0776470252

References:
1.       Kumar and Clark's Clinical Medicine, 7th Edition from Parveen Kumar, Michael Clark.
2.       The diabetes epidemic in Sri Lanka – a growing problem - P Katulanda, MHR Sheriff  and DR Matthews Ceylon Medical Journal Vol.51(1) 2006 26-28
4.        அல்-ஹசனாத் மாத இதழின் Dr. Kamal Nasar MBBS (Sri Lanka), MRCP (UK) உடனான பேட்டி

5.       emedicine.medscape.com - Type 2 Diabetes Mellitus - Author: Romesh Khardori, MD, PhD, FACP; Chief Editor: George T Griffing, MD  

6.       National diabetes prevention programme of USA - The Lifestyle Coach Facilitation Guide developed by the Diabetes Training and Technical Assistance, Center at the Rollins School of Public Health, Emory University for National diabetes prevention programme of USA
7.        எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) , புகைத்தலின் மார்க்க நிலைப்பாடு, இஸ்லாம்கல்வி.காம்
8.        தப்ஸீர் இப்னு கசீர் - ஸூறா அல்-அஃராப் 7:31
9.       Ma'ariful Quran - Thafseer - Sura Al-A'raf 7:31
10.      ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஸகரிய்யா ஸாஹிப், சதகாவின் சிறப்பு, ஆறாம் பாகம், பக்கம் 588 - 604
11.     ரியாழுஸ் ஸாலிஹீன் மற்றும் பல ஹதீஸ் கிரந்தங்கள்         

No comments:

Post a Comment