அரபு மொழியின்
முக்கியத்துவம் உணரப்படாதது சமுதாயத்தின் பெரும் குறையாகும்.
மனிதன் படைக்கப்பட்டதன்
நோக்கம் இபாதத் ஆகும்.
மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் அவன் அல்லாஹ்வை
வணங்கி அவனது கட்டளைகளை எடுத்து நடக்க வேண்டும் என்பதற்காகவே என அல் குர்ஆன்
கூறுகின்றது.
·
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை இபாதத் செய்வதற்காகவே (வணங்கி - வழிபடுவதற்காகவே) அன்றி
நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் - 51:56)
அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கத்தினை மனிதன் நிறைவு செய்யும் பொழுது அல்லாஹ் அந்த மனிதனின் மீது திருப்தியடைகின்றான். எனவே அந்த மனிதன் அகிலங்களுக்கெல்லாம் இரட்சனகாகிய அல்லாஹ்வின் அன்புக்கும், அருளுக்கும், உதவிக்கும் தகுதியுடையவனாக மாறிவிடுகின்றான்.
ஈருலக நல் வாழ்வுக்கு
ஒரே வழி அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து வாழ்வது ஆகும்.
ஒருவர் இம்மையிலும் மறுமையிலும் நல் வாழ்வை அடைய விரும்பினால் அல்லாஹு தஆலா அல் குர்ஆனிலே அருளிய கட்டளைகளை நபிவழியில் செயல்படுத்துவதில் மட்டுமே அதனை அடையலாம். மாறாக அல்லாஹ்வின்
கட்டளைகளைப் புறக்கணித்து வாழ்வதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் நெருக்கடியான
வாழ்வே உண்டாகும் என்பதனையே பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
·
ஆணாயினும் பெண்ணாயினும், எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான செயல்களைச் செய்கிறாரோ, அவரை நிச்சயமாக (இவ் உலகில்) மணமிக்க தூய வாழ்க்கையாக வாழச் செய்வோம்; மேலும், (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்தும் மிக அழகிய கூலியாக நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல் குர்ஆன் - 16:97)
·
எவன் என்னுடைய உபதேசத்தினைப் புறக்கணிக்கின்றானோ, அவனுக்கு நிச்சயமாக நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது; மேலும் மறுமையில் அவனைக் குருடனாகவே எழுப்புவோம். (அல் குர்ஆன் - 20:124)
அல்லாஹ்வின்
இத்தகைய சத்திய வாக்குறுதிகளை உணராமல், தன் வாழ்க்கையிலே எடுத்து நடக்காமல், மற்ற
மக்களுக்கு இத்தகைய சத்தியத்தினைப் போதிக்காமல் வாழும் வாழ்க்கை நஷ்டத்திற்குரிய
வாழ்க்கையே ஆகும் என அல்
குர்ஆன் கூறுகின்றது.
·
காலத்தின் மீது
சத்தியமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான செயல்களைச் செய்து, சத்தியத்தை
ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, பொறுமையை ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ
அவர்களைத் தவிர, நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலே இருக்கிறான். (அல் குர்ஆன் - 103:1-3)
மக்களை அல்லாஹ்வின்
பக்கம் அழைப்பது ஒரு சமூகப் பொறுப்பாகும்.
ஒவ்வொரு சமூகத்தாரும் மக்களை
அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் பணியினைச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி பின்வரும்
வசனங்கள் சூசகமாகக் குறிப்பிடுகின்றன.
·
உங்களுக்கு
முன்னால் இருந்த சமுதாயங்களில், இந்த பூமியில் குழப்பங்களைத் தடுக்கக் கூடிய அறிவுடையோர்
இருந்திருக்கக் கூடாதா?.... ஓர் ஊராரை, அவ் ஊரார் சீர்திருத்திக் கொண்டிருக்கும்
நிலையில் அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான். (அல் குர்ஆன் - 11:116,117)
அழைப்புகளில் மிகச்
சிறந்தது தொழுகையின் பக்கம் மக்களை அழைப்பது ஆகும்.
அல்லாஹ்வின் பக்கம்
அழைக்கும் அழைப்புகள் எல்லாவற்றிலும் தலையானதும், மிகச் சிறந்ததுமான அழைப்பு தொழுகையின்
பக்கம் மக்களை அழைப்பதே ஆகும். "அதான்" என்பது தொழுகைக்கான அழைப்பாகும்.
அதான் முடிந்தவுடன் ஓதும் பிரார்த்தனையில் வரும் பின்வரும் வசனங்கள் இவ் அழைப்பு
ஒரு பரிபூரணமான அழைப்பு
எனத் தெளிவுபடுத்துகின்றன.
·
அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மதி, வஸ் ஸலாதில் காஇமதி... (இறைவா! இந்த பரிபூரணமான அழைப்புக்கும், நிலையான தொழுகைக்கும் உரிய இரட்சகனே!...) (நூல்: புகாரி - 614)
மேலும், முஅத்தின்
அதானில் "...தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்! வெற்றியின் பக்கம்
விரைந்து வாருங்கள்...!" (...ஹய்ய அலஸ் ஸலாஹ்! ஹய்ய அலல் பலாஹ்!...)
என்றெல்லாம் காதைப் பொத்திக் கொண்டு ஓங்கி ஒலிக்கின்றார். இத்தகைய உன்னதமான
தொழுகைக்கான அழைப்பினைக் கேட்கச் சகிக்காமல் நாற்ற வாயு வெளியேறிய வண்ணம் ஷைத்தான்
வெகு தூரத்திற்கு பின்வாங்கி ஓடுகின்றான்.
·
ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள்:
தொழுகைக்காக அறிவிப்புச் செய்யப்பட்டால் தொழுகை அறிவிப்பைக் கேற்காமலிருப்பதற்காக
நாற்ற வாயு வெளியேறிய வண்ணம் ஷைத்தான் (வெகு தூரத்திற்கு) பின்வாங்கி ஓடுகின்றான். (நூல்: புகாரி - 608)
தொழுகை சீராகினால் எமது
செயல்கள் அனைத்தும் சீராகி விடும்.
நிச்சயமாக தொழுகையானது ஒரு மனிதனின் வாழ்வில் இறையச்சத்தினைத் தோற்றுவித்து,
அந்த மனிதனை பெரும் பாவங்களிலிருந்தும் சிறிய பாவங்களிலிருந்தும் தடுத்து,
அவனது வாழ்க்கையினையே மாற்றக் கூடிய மிகப் பெரும் சக்தி ஆகும். இதனையே பின்வரும் அல்
குர்ஆன் வசனமும், ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றன.
·
நிச்சயமாக, தொழுகையானது,
(மனிதனை) மானக் கேடானவற்றையும் பாவத்தையும்
விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின்
திக்ரு (நினைவு) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும். (அல் குர்ஆன் - 29:45)
·
ஒரு மனிதர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்து, ''இன்ன மனிதர் இரவில் தொழுகிறார். ஆனால், காலையில் திருடுகிறார்" எனக் கூறினார். அதற்கு நபியவர்கள் "நீங்கள் கூறுவது (அதாவது, தொழுகை) அவர் அவ்வாறு செய்வதை (திருடுவதை) விட்டும் அவரைத் தடுக்கும்" எனக் கூறினார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்) (இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என ஹைதமீ மஜ்மஉல் ஸவாயிதில்
கூறுகிறார்கள் - (2/261); மேலும் ஷுஅய்புல் அர்னஊத், ஆதில் முர்ஷித் ஆகியோர்
தஹ்கீக் அல் முஸ்னதில் இந்த அறிவிப்பு ஸஹீஹானது என்கின்றனர் - (15/483))
ஆனால், இத்தகைய
சக்தி வாய்ந்த தொழுகை நமது சமுதாயத்தில் எத்தனை பேருடைய வாழ்க்கையினை
பாவங்களிலிருந்தும் தடுத்து சீராக்கி இருக்கிறது என்று பார்த்தால் மிகவும் கவலைக்குரிய
பதிலையே எதிர்பார்க்க முடிகிறது. காரணம் என்ன என அலசிப் பார்த்தால் இவர்கள் தொழும்
தொழுகை வெறும் உடலின் அசைவாகவே இருக்கிறதல்லாமல், உள்ளத்திலிருந்து உதிக்கும்
உணர்வு பூர்வமானதாக இல்லை. உள்ளத்தில் உணர்வு வர வேண்டுமானால் தொழுகையில்
நாங்கள் என்ன ஒதுகின்றோம் என விளங்கும் வகையில் அரபி மொழியைக் கற்றிருப்பது
அவசியமாகும். இல்லையானால் நாவு எதனையோ சொல்லும்; உள்ளம் எதனையோ சிந்திக்கும்; இது
நேர்மையான செயல் அல்ல. நாவுக்கும் உள்ளத்துக்கும் இடையில் தொடர்பை
ஏற்படுத்துவதுதான் நேர்மையான சொல்லும், நேர்மையான செயலும் ஆகும். நாவுக்கும்
உள்ளத்துக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதுதான் நமது வேலை. பிறகு நமது
வாழ்க்கையினை சீராக்குவதற்கு அல்லாஹ் போதுமானவன். இதனையே பின் வரும்
வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடிகின்றது.
·
விசுவாசம்
கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
(அவ்வாறு நீங்கள் செய்தால்) அவன் உங்களுடைய செயல்களை சீராக்கி வைப்பான்; உங்களது
பாவங்களை மன்னிப்பான். (அல் குர்ஆன் - 33:70-71)
தொழுகையின் நோக்கமே
திக்ர் (இறை சிந்தனை) ஆகும்.
அல்லாஹ்வை நினைவுபடுத்தும் பொருட்டு
தொழுகையை நிலை நிறுத்துமாறு அல் குர்ஆன் கட்டளையிடுகின்றது.
·
என்னை நினைவுபடுத்தும் பொருட்டு தொழுகையை
நிலை நிறுத்துவீராக. (அல் குர்ஆன் - 20:14)
மேலும், இறைவனை
திக்ர் செய்வதில் கிடைக்கும் இன்பத்தினை விட, அதில் கிடைக்கும் உள அமைதியை விட,
இன்பம் தரக் கூடிய, உள அமைதி தரக் கூடிய வேறு எதுவுமே இல்லை எனும் உண்மையினை பின்வரும்
வசனம் தெளிவுபடுத்துகின்றது.
·
மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால்
அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டுதான்
இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதனை அறிந்து கொள்ளுங்கள். (அல் குர்ஆன் - 13:28)
அல் குர்ஆனே மிகச்
சிறந்த திக்ர் ஆகும்.
அகிலங்களுக்கெல்லாம் இரட்சகனாகிய அல்லாஹ்,
மனிதர்களுக்கு சத்தியத்தினைத் தெளிவுபடுத்தி, அவர்களுக்கு நேர்வழி
காட்டுவதற்காகவும், அத்தகைய சத்திய வழியில் பயணிக்க விரும்புபவர்களுக்கு
நல்லுபதேசம் செய்வதற்காகவும், பரிசுத்த வேதமாகிய அல் குர்ஆனை இறைதூதர் முஹம்மது
(ஸல்) அவர்கள் மீது இறக்கியருளினான். தூதராகிய அவர், அல்லாஹ்வுடைய வசனங்களை மக்களுக்கு ஓதிக் காண்பித்து,
பிரச்சாரம் செய்தார்கள். இது பற்றி பின்வரும் வசனங்கள் விளக்குகின்றன.
·
(அல் குர்ஆனாகிய) இது, மனிதர்களுக்கு (சத்தியத்தின்)
தெளிவாகவும், நேர்வழி காட்டியாகவும், இறையச்சமுடையோருக்கு நல்லுபதேசமாகவும்
இருக்கிறது. (அல் குர்ஆன் - 3:138)
·
(அல்லாஹ்வின் தூதராகிய) அவர் (அல்லாஹ்வாகிய)
அவனுடைய வசனங்களை (மக்களாகிய) அவர்களுக்கு ஓதிக் காண்பித்து, அவர்களைப்
பரிசுத்தமாக்கியும் வைத்து, அவர்களுக்கு வேதத்தையும், தீர்க்கமான அறிவையும்
கற்றுக் கொடுக்கிறார். (அல் குர்ஆன் - 62:2)
கருத்துச் செறிவுமிக்க அத்தகைய வசனங்கள்
விசுவாசிகளின் காதினூடாகப் புகுந்தன; உள்ளங்களில் ஆழமாக ஊடுருவின; உள்ளங்களை
உருகச் செய்தன; உள்ளங்களைப் பரிசுத்தமாக்கின; கண்களில் கண்ணீர் ததும்பச் செய்தன; அவர்களின்
விசுவாசத்தினை மென்மேலும் அதிகரிக்கச் செய்தன. இது பற்றி பின்வரும் வசனங்கள்
விளக்குகின்றன.
·
இன்னும், அவர்கள் (நம்) தூதர் மீது
இறக்கப்பட்டதைச் செவியுற்றால், உண்மையை அவர்கள் அறிந்து கொண்டதன் காரணமாக,
அவர்களின் கண்களை - அவை கண்ணீரால் நிரம்பி வழிவதை நீர் காண்பீர். "எங்கள்
இரட்சகனே! (இவ் வேதத்தை) நாங்கள் விசுவாசித்தோம்; ஆகவே, (இவ் வேதம்
உண்மையானதென்று) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து
கொள்வாயாக!" என்று கூறுகின்றனர். (அல் குர்ஆன் - 5:83)
·
(இவ் வேதத்தை இறக்கி
வைத்த) அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்
காண்பிக்கப்பட்டால், அவை (விசுவாசிகளாகிய) அவர்களுக்கு விசுவாசத்தை
அதிகப்படுத்தும். (அல் குர்ஆன் - 8:2)
இத்தகைய மாற்றங்களை
மனித உள்ளத்தில் ஏற்படுத்தும் அற்புதத் தன்மையை அல்லாஹு தஆலா அல் குர்ஆன்
வசனங்களில் வைத்துள்ளான். ஆனால் நம்மில் எத்தனை பேர் நமது வாழ்வில் அத்தகைய
மாற்றங்களை அனுபவிக்கிறோம்? வெகு சொற்பமே தவிர இல்லை. உள்ளத்தில் உணர்வு வர
வேண்டுமானால் நாங்கள் என்ன ஒதுகின்றோம் என விளங்கும் வகையில் அரபி மொழியைக்
கற்றிருப்பது அவசியமாகும். இல்லையானால் நாவு எதனையோ சொல்லும்; உள்ளம் எதனையோ
சிந்திக்கும்.
அல் குர்ஆன் ஓதாமல்
தொழுகையே இல்லை.
அல்லாஹ்வை நினைவுபடுத்தக் கூடிய
திக்ருகளில் மிகச் சிறந்த திக்ர் அல் குர்ஆனே ஆகும். அல்லாஹ்வை நினைவு படுத்தும் பொருட்டு இத்தகைய சிறப்புமிக்க அல் குர்ஆனை அனுதினமும் தொழுகையிலும், தொழுகை அல்லாத வேளையிலும் நாம் ஓதி வர
வேண்டும் என்றும், அல்லாஹ்வை
நினைவுபடுத்தும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துமாறும் அல் குர்ஆன் நமக்குக் கட்டளையிடுகின்றது.
பின்வரும் வசனத்தில் அல்லாஹ் இவ் இரண்டையும் கடைப்பிடித்து ஒழுகும் படி நமக்குப்
போதனை செய்கிறான்.
·
(நபியே!) இவ் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதனை நீர் எடுத்து ஓதுவீராக.
இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவீராக. (அல் குர்ஆன் - 29:45)
அல் குர்ஆனும்,
தொழுகையும்
ஒன்றோடொன்று
பின்னிப்பிணைந்த, பிரிக்க முடியாத இரு தலையான
இபாதத்துகளாகும். முழுக் குர்ஆனின் அர்த்தத்தையும் உள்ளடக்கிய, நமது வாழ்க்கைக்கு மிகவும்
அவசியமான
ஒன்றான நேர்வழியைக் கேட்கும்
படியான, பிரார்த்தனை வடிவில்
அமைந்த, ஸூறா அல் பாதிஹாவே தொழுகையில் அல் குர்ஆன் ஒதுவதில் மிகவும் பிரதானமானது ஆகும். இந்த ஸூறாவை
ஒவ்வொரு
தொழுகையிலும், ஒவ்வொரு ரகஅத்திலும் ஓதுவது பர்ளு ஆகும்.
அவ்வாறு ஒதாவிட்டால் தொழுகையே செல்லாது.
·
ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள்: குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல் பாதிஹா அத்தியாயத்தை)
ஒதாதவருக்குத்
தொழுகையே இல்லை. (நூல்: புகாரி - 756; முஸ்லிம் - 651)
இதிலிருந்தே இந்த ஸூறாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாமல்லவா? ஆனால் நம்மில்
எத்தனை பேர் இதன் கருத்தினை விளங்கி ஓதுகிறார்கள்? இறைவனிடம் நாம் பேசுகிறோம்;
அவனிடம் பிரார்த்தனை செய்கிறோம் என்ற உணர்வு நமக்குத் தோன்றுகிறதா எனக் கேட்டால்
கவலைக்கிடமான பதிலையே எதிர்பார்க்க முடியும். உள்ளத்தில் உணர்வு
வர வேண்டுமானால் நாங்கள் என்ன ஒதுகின்றோம் என விளங்கும் வகையில் அரபி மொழியைக்
கற்றிருப்பது அவசியமாகும். இல்லையானால் நாவு எதனையோ சொல்லும்; உள்ளம்
எதனையோ சிந்திக்கும்.
அல் குர்ஆன் ஓதுவதன் மூலம் தொழுகையில் கண் குளிர்ச்சி பெறுக.
இரவுத் தொழுகைக்காக
படுக்கையை விட்டும் எழுந்து, இறைவனின் முன்னால் கை கட்டி நின்று, அதில் அல் குர்ஆன்
வசனங்களை நிறுத்தி நிறுத்தி அழகான தொனியில் ஓதி, அந்த வசனங்களின் இராகங்களையும்,
கருத்துச் செறிவின் இனிமையையும் இறையச்சத்தோடு இரசித்து, அதன் கருத்துகளை விளங்கி, அதன் பாடங்களை மனதிற்குள் புகுத்தி, வாழ்வில் கடை பிடிக்க முயற்சிக்க வேண்டும். அல் குர்ஆனை விளங்கி ஓதும் பொழுது, அது எமது உள்ளங்களை உருகச் செய்கின்றன; உள்ளங்களைப்
பரிசுத்தமாக்குகின்றன; கண்களில் கண்ணீர் ததும்பச் செய்கின்றன; விசுவாசத்தினை
மென்மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. அதன் மூலம், எமது வாழ்வில் அதனது ஏவல்களை எடுத்தும், விலக்கல்களைத் தவிர்ந்தும் வாழ்வது இலகுவாக இருக்கும்.
விசேடமாக ரமழான்
மாதத்திலே இரவுத் தொழுகையைப் பேணித் தொழுது வருமாறு நபி (ஸல்) அவர்கள்
வலியுறுத்தியிருக்கிறார்கள். இத்தகைய இரவுத் தொழுகை பற்றி பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
·
போர்வை போர்த்திக்
கொண்டிருப்பவரே! இரவில் (தொழுவதற்காக) எழுவீராக! சிறிது நேரம் தவிர; அதில் பாதி
(நேரத்தில் தொழுவீராக!) அல்லது அதிலிருந்து சொற்ப (நேர)த்தைக் குறைத்துக் கொள்வீராக!
அல்லது அதை விட(ச் சற்று நேரத்தை) அதிகப்படுத்திக் கொள்வீராக! (இரவுத் தொழுகையான)
அதில் குர்ஆனை நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக! (அல் குர்ஆன் - 73:1-4)
ஆனால் நம்மில் எத்தனை
பேர் அல் குர்ஆனின் கருத்தினை விளங்கி ஓதுகிறார்கள்? உள்ளத்தில் உணர்வு
வர வேண்டுமானால் நாங்கள் என்ன ஒதுகின்றோம் என விளங்கும் வகையில் அரபி மொழியைக்
கற்றிருப்பது அவசியமாகும். இல்லையானால் நாவு எதனையோ சொல்லும்; உள்ளம்
எதனையோ சிந்திக்கும்.
அல் குர்ஆன்
ஓதப்பட்டால் அதனை நீங்கள் செவிதாழ்த்திக் கேளுங்கள்.
தொழுகையில் இமாம்
அல் குர்ஆனை சப்தமிட்டு ஓதும் பொழுது பின்னால் இருப்பவர்கள், ஸூரா அல் பாதிஹா
ஓதும் நேரம் தவிர இதர நேரங்களில், இமாமுடைய ஒதலைக் காது தாழ்த்திக் கேட்பது
கடமையாகும்; மேலும், தொழுகைக்கு வெளியில் ஒருவர் அல் குர்ஆனை சப்தமிட்டு ஓதும்
பொழுது அதனைக் காது தாழ்த்திக் கேட்பது விரும்பத்தக்கதாகும் என அறிஞர்கள் பின்வரும்
வசனத்துக்கு விளக்கமளிக்கின்றனர். (பார்க்க: தப்ஸீர் இப்னு கசீர்)
·
இன்னும், அல்
குர்ஆன் ஓதப்பட்டால் அதனை நீங்கள் செவிதாழ்த்திக் கேளுங்கள்; வாய் மூடி
(நிசப்தமாக) இருங்கள்; (அதன் காரணமாக) நீங்கள் அருள் செய்யப்படலாம். (அல் குர்ஆன் - 7:204)
அல் குர்ஆன்
வசனங்கள் மனிதர்களின் உள்ளங்களிலே ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி மேலே நாம்
பார்த்தோம். மனிதர்களின் உள்ளங்களிலே மாற்றங்களை ஏற்படுத்தி, அவனை சீர் செய்ய
வேண்டுமானால் அவன் அல் குர்ஆனை செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். எனவேதான் அல்லாஹ் "அல்
குர்ஆன் ஓதப்பட்டால் அதனை நீங்கள் செவிதாழ்த்திக் கேளுங்கள்; வாய் மூடி
(நிசப்தமாக) இருங்கள்" எனக் குறிப்பிடுகிறான். ஆனால் இந்தத் தத்ரூப
உண்மையினை நம்மில் எத்தனை பேர் புரிந்திருக்கிறார்கள்? எத்தனை பேர்
அனுபவிக்கிறார்கள்? கவலைக்குரிய பதிலே கிடைக்கிறது. ஏனெனில், அவர்களுக்கு அல் குர்ஆனின் கருத்து
விளங்குவதில்லை. உள்ளத்தில் உணர்வு வர வேண்டுமானால் நாங்கள் என்ன கேட்கிறோம்
என விளங்கும் வகையில் அரபி மொழியைக் கற்றிருப்பது அவசியமாகும். இல்லையானால் காது
எதனையோ கேட்கும்; உள்ளம் எதனையோ சிந்திக்கும்.
திக்ருகள் ஏன் அரபி மொழியில் ஓதப் பட வேண்டும்?
அல்லாஹ்வை நினைவுபடுத்தும்
பொருட்டு தொழுகையில் ஓதக் கூடிய பிரதானமான திக்ருதான் அல் குர்ஆன் ஆகும். மேலும், ஏராளமான தஸ்பீஹுகள், இஸ்திஃபார், துஆ, ஸலவாத் போன்றவற்றினை நபி (ஸல்) அவர்கள் தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் ஓதும் படி கற்றுத்
தந்திருக்கிறார்கள். இவை அனைத்துமே அரபு
மொழியில்தான் ஓதப்படுகின்றன. ஏனெனில், நபி (ஸல்) அவர்களது வார்த்தைகள் அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கப்பட்ட
வஹீயே தவிர தன் மனோ இச்சைப் படி உருவானவை அல்ல. இதனையே பின்வரும் வசனங்கள்
தெளிவுபடுத்துகின்றன.
·
நட்சத்திரத்தின் மீது சத்தியமாக - அது
விழுந்து விடும் சமயத்தில்; (நம்முடைய தூதராகிய) உங்களுடைய தோழர் வழி
தவறிவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை; அவர் தன் மன இச்சைப் படி
(எதையும்) பேசுவதுமில்லை; அது அறிவிக்கப்படும் (வஹியாகிய) அறிவிப்பே தவிர (வேறு)
இல்லை. (அல் குர்ஆன் 53:1-4)
எனவே, இத்தகைய வஹீயிற்கு
ஈடான ஒரு மொழி பெயர்ப்பை செய்வது, இந்த உலகத்திலுள்ள அறிவாளிகள் அனைவரும் ஒன்று
சேர்ந்தாலும் முடியாத காரியமாகும்; வஹீ வஹீதான்; மொழி பெயர்ப்பு மொழி
பெயர்ப்புதான்; ஒன்று மற்றொன்றுக்கு ஈடாக மாட்டாது. ஆகவே, அல் குர்ஆன், தஸ்பீஹுகள், இஸ்திஃபார், துஆ, ஸலவாத் போன்ற அனைத்து திக்ருகளுமே அரபு மொழியில்தான் ஓதப்படுகின்றன. ஆதாரமான ஹதீஸ்களிலே வந்திருக்கின்ற திக்ருகளை, அரபு
மொழியிலேயே வேறு ஒத்த சொற்களைக் கொண்டு பிரதியீடு செய்வதனையும் நபி (அல்) அவர்கள் அனுமதிக்கவில்லை
என்பதனை பின்வரும் சம்பவம் தெளிவுபடுத்துகிறது.
·
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள்: "நான் இவற்றைத் திரும்ப ஓதிக் காட்டுகிறேன்" என நபி
(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். (‘வநபிய்யிக
அல்லதி அர்ஸல்த’ - உன்னால் அனுப்பப்பட்ட நபியையும் என்பதற்குப் பதிலாக) ‘வரஸூலிக
அல்லதி அர்ஸல்த’ (உன்னால் அனுப்பப்பட்ட ரஸூலையும்) என்று நான் சொல்லிவிட்டேன்.
உடனே நபி (ஸல்) அவர்கள், "இல்லை; ‘வநபிய்யிக அல்லதி அர்ஸல்த’ (உன்னால்
அனுப்பப்பட்ட நபியையும்) என்று சொல்" என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள். (ஹதீஸின்
சுருக்கம்; பார்க்க: புகாரி - 247, 6311)
அதாவது, இங்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு தோழருக்கு இரவில் பிரார்த்திப்பதற்காக ஒரு பிரார்த்தனையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதில் ‘வநபிய்யிக
அல்லதி அர்ஸல்த’ (உன்னால் அனுப்பப்பட்ட நபியையும்) என்ற வார்த்தையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த நபித்தோழர் அந்தப் பிரார்த்தனையை மனனம் செய்துக் கொண்டு வந்து இறைத் தூதரிடம் ஒப்புவித்து சரிபார்க்கிறார்.
அப்போது ‘வநபிய்யிக அல்லதி அர்ஸல்த’ என்று இறைத்தூதர் கற்றுக் கொடுத்த அந்த வார்த்தையை மாற்றி ‘வரஸூலிக அல்லதி அர்ஸல்த’ (உன்னால் அனுப்பப்பட்ட றஸூலையும்) என்று மனனம் செய்து வந்தார். ‘நபிய்யிக’ ‘ரஸூலிக’ ஒரேயொரு பதம் மாறுகிறது. ஆனால் இரண்டுக்கும்
அர்த்தம் ஒன்றுதான். ‘நபிய்யிக’ ‘உனது நபியை’ – ‘ரஸூலிக்க’ ‘உனது தூதரை’. நபியாகவும்
– ரஸூலாகவும் முஹம்மத் (ஸல்) இருக்கும் போதும் ‘நபிய்யிக’ என்று கற்றுக்
கொடுத்ததை
‘ரஸூலிக்க’ என்று மாற்றிக்
கொண்டு வந்ததை நபி (ஸல்) அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ‘நான் கற்றுக் கொடுத்தது போன்று ‘நபிய்யிக’ என்றே சொல்’ என்று திருத்தம் செய்கிறார்கள்.
ஆகவே, அல் குர்ஆன், தஸ்பீஹுகள், இஸ்திஃபார், துஆ, ஸலவாத் போன்ற அனைத்து திக்ருகளுமே அரபு மொழியிலேயே ஓதப்பட வேண்டியதன்
முக்கியத்துவத்தினை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். ஆனால் நம்மில் எத்தனை
பேர் இத்தகைய திக்ருகளின் கருத்தினை விளங்கி
ஓதுகிறார்கள்? உள்ளத்தில் உணர்வு வர வேண்டுமானால் நாங்கள் என்ன ஒதுகின்றோம் என விளங்கும் வகையில் அரபி மொழியைக் கற்றிருப்பது அவசியமாகும். இல்லையானால் நாவு எதனையோ சொல்லும். உள்ளம் எதனையோ சிந்திக்கும். அரபு மொழி தெரியாதவர்கள் தன் வாழ்க்கையின் மிகப் பெரும் பொக்கிசத்தினை
இழந்திருக்கிறார்கள் என உணர மாட்டார்களா?
அரபு மொழி எழுச்சி - ஒரு சர்வதேசப்
புரட்சி
ஆங்கில மொழியைப் பரப்புவதற்காக அந்த மொழி
பேசக் கூடிய நாட்டவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள்
எடுத்துக் கொண்ட முயற்சி, அதற்கான அயராத
உழைப்பு, நம் நிலத்தில் பிறக்கும் குழந்தைகள் ‘அம்மா அப்பா’ என்று கற்றுக் கொள்வதற்கு முன் ‘மாம் டாட்’ என்பதை சொல்லி சந்தோஷப்படுகிறது. மொழி
நாகரீகம் என்பதே ஆங்கிலம் தான்; ஆங்கிலம் தெரியாதவன்
நாகரீகக் குறைவு உடையவன்தான் என்ற
மனநிலை உலகெங்கும்
வியாபித்துப் போய்விட்டது.
குர்ஆன் வெளிப்பட்ட நாள் முதல் அதற்கு
நிகராக உலகில் ஒரு வேதம் இல்லை; வருவதற்கும்
வாய்ப்பில்லை என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் முஸ்லிம்களில்
போதிய அளவு செல்வமும், நிறைந்த
வாழ்க்கைத் தரமும்,
அதிகப்படியான நிலப்பரப்புகளையும் கொண்டவர்கள் அரபிகள். இருந்தும் அவர்களால் அரபியை ஓர் உலக மொழியாக ஆக்க முடியவில்லை. முடியவில்லை என்பதை விட முயற்சிக்கவில்லை என்றே சொல்ல
வேண்டும். இன்றைக்கும் நிலவரம்
இதுதான். அல்லாஹ்
நாடியிருந்து, ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பாவது இம் முயற்சியில் அவர்கள் இறங்கி இருந்தால் இன்றைக்கு நாங்கள் அனைவரும்
அரபி மொழியை முழுமையாக கற்றுக் கொண்டிருப்போம். அந்த மொழி
நம்மிடையே பேச்சு வழக்கு மொழியாகி
தாய் மொழியின்
இயல்பைப் பெற்றிருக்கும். அரபு மொழி ஆரம்பப் பாடசாலையிலிருந்து உயர் கல்வி வரை பாட
திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தால் நம் நாடுகளில் அரபு மதரஸாக்களுக்கு
வேலையில்லாமல் போயிருக்கும்.
தொழுகை, அல் குர்ஆன், தஸ்பீஹுகள், இஸ்திஃபார், துஆ, ஸலவாத் போன்ற
வணக்கங்களில் மட்டுமின்றி பொதுவாழ்க்கையிலும் அரபு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இது நம்மைப் பொருத்தவரை மிகக் கடினமான பணிதான் என்றாலும் அந்த சிந்தனையையாவது மக்களிடம்
கொண்டு செல்வோம். இன்ஷா அல்லாஹ்.
அரபு மொழி எழுச்சி - தஃவா அமைப்புகளின்
பொறுப்பு.
நம் நாட்டில் பல தஃவா அமைப்புகள் தூய நோக்கத்துடன் மக்களை அல்லாஹ்வின் பக்கம்
அழைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமது கவனத்தினை "அரபு மொழி எழுச்சி" எனும் சிந்தனையின் பக்கம் செலுத்துவது அவர்களது பொறுப்பாகும். அவர்கள்
அரபு மொழி எழுச்சி பற்றிய ஒரு பாரிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் முன் வைக்கக்
கடமைப்பட்டுள்ளார்கள்.
அரபு மொழி எழுச்சி - உலமாக்களின்
பொறுப்பு.
அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா தொடக்கம், கிராம மட்டத்தில் இயங்கும் ஒவ்வொரு உலமா சபைகளும் தமது
கவனத்தினை "அரபு
மொழி எழுச்சி" எனும் சிந்தனையின்
பக்கம் செலுத்துவது அவர்களது பொறுப்பாகும். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுகையில்
அசைவுகளை அமைத்துக் கொண்டார்களோ அவ்வாறே நாமும் தொழ வேண்டும் என்பது பற்றி மக்கள்
முன்னிலையில் மணித்தியாலக் கணக்கு பேசுகிறோம். கருத்து வேறுபாடுகளை
விவாதிக்கிறோம். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுகையில் தமது சொல்லுக்கும்,
உள்ளத்துக்கும் இடையில் தொடர்பை உண்டாக்கினார்கள் என்பது பற்றி எந்தளவு பேசுகிறோம்?
அத்தஹிய்யாத்தில் விரலை அசைப்பதா? இல்லையா என தெளிவுபடுத்துகிறோம். ஆனால்,
அத்தஹிய்யாத்தில் ஓதும் ஓதலின் அர்த்தம் பற்றி எந்தளவு தெளிவுபடுத்துகிறோம்?
குர்ஆன் ஓதுவதன் சிறப்பு பற்றி பேசுகிறோம். ஆனால், உண்மையில் குர்ஆன் ஓதுவதன்
நோக்கம் என்ன எனத் தெளிவுபடுத்துகிறோமா? ஒவ்வொரு ஆலிமும் தமது குத்பாக்களில், உபதேசங்களில்
"அரபு மொழி எழுச்சி" பற்றிய ஒரு பாரிய விழிப்புணர்வை மக்கள்
மத்தியில் முன் வைக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
அரபு மொழி எழுச்சி - தேசிய அமைப்புகளின்
பொறுப்பு.
தேசிய மட்டத்தில்
இயங்குகின்ற பல முஸ்லிம் அரசியல் அமைப்புகள், ஒன்றியங்கள், இயக்கங்கள் தமது
கவனத்தினை "அரபு
மொழி எழுச்சி" எனும் சிந்தனையின்
பக்கம் செலுத்துவது அவர்களது பொறுப்பாகும். அதற்குரிய பொருளாதார வள வசதிகளை
அமைத்துக் கொடுப்பது அவர்களது கடமையாகும்.
அரபு மொழி எழுச்சி - பள்ளிவாசல்
நிர்வாகிகளின் பொறுப்பு.
ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகிகளும், ஊர் முக்கியஸ்தர்களும் இது
சம்பந்தமாக ஊர் மட்டத்தில் என்ன முயற்சி செய்யலாம் என சிந்திப்பது அவர்களது
பொறுப்பாகும். சிறுவர்கள் பள்ளிக் கூடத்தில் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்வதோடு
நிறுத்தி விடுகிறார்கள். அதன் பின் அவர்களுக்கும் குர்ஆனுக்கும் இடையில் எந்தத்
தொடர்பும் கிடையாது. இதற்காகத்தானா அல்லாஹ் குர்ஆனை இறக்கியருளினான். இல்லவே
இல்லை. பாடசாலைகளில் தரம் ஆறு தொடக்கம் தரம் பத்து வரையுள்ள காலம் மாணவர்களுக்கு
கூடுதலாக ஒய்வு இருக்கும் காலமாகும். அதிலே, அவர்களை மாலை நேர பகுதி நேர
மதரஸாக்களின் மூலம் தொடர்ந்து இணைத்து அரபு மொழி உட்பட இஸ்லாமியக் கல்வியைக்
கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யலாம். பகுதி நேர ஹிப்ழ் மதரஸாக்களிலும் அரபு மொழிக்கே
கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
அரபு மொழி எழுச்சி - பாடசாலை
நிர்வாகிகளின் பொறுப்பு.
முஸ்லிம் பாடசாலைகள் கிராஅத்துடன் ஆரம்பித்து, ஸலவாத்துடன்
முடிகின்றன. மேலும், நிர்வாகிகள் முஸ்லிம்களாக உள்ளனர். இது தவிர முஸ்லிம்
பாடசாலைகளுக்கும் முஸ்லிமல்லாத பாடசாலைகளுக்கும் இடையில் ஒரு வித்தியாசமும்
கிடையாது. முஸ்லிம் பாடசாலை என்றால் அதிலே இஸ்லாம் இருக்க வேண்டும். இஸ்லாம்
என்றால் அல் குர்ஆன் ஆகும். அல் குர்ஆன் என்றால் அரபு மொழி ஆகும். ஆனால் அரபு
மொழிக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது? கவலைக்குரிய விடயம்
என்னவென்றால் சித்திரப் பாடத்துக்கோ, சங்கீதப் பாடத்துக்கோ கொடுக்கும்
முக்கியத்துவம் கூட அரபு மொழிக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு முஸ்லிம்
பாடசாலைகளிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சியில் இஸ்லாம், அரபு, அரபு
இலக்கியம் எனும் மூன்று பாடங்களையும் முஸ்லிம் மாணவர்களுக்கு கட்டாயமாக்கலாம். அதற்கான
முகாமைத்துவ ஏற்பாடுகளை செய்வது ஒவ்வொரு அதிபர்களினதும் கடமையாகும். இது பற்றி
மறுமையில் அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
அரபு மொழி எழுச்சி - பெற்றோரின்
பொறுப்பு.
பெற்றோர்களே! இன்றைய உங்கள் குழந்தைகள்தான் நாளைய தலைவர்கள்.
அவர்கள் உங்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அமானிதமாகும். இன்று நீங்கள்
அவர்களுக்கு மிக அவசியமான அரபு மொழியைக் கற்பதற்கு உதவி செய்யவில்லையானால் நாளை
மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி
மறுமையில் விசாரிக்கப்படுவார்கள்.
·
"நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி
நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புஹாரி - 2554)
நமது குழந்தைகள்
பள்ளிக் கூடம் சென்று குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்வதோடு நிறுத்திவிடாமல், அதன் கருத்துகளை விளங்கக் கூடிய வகையில் அரபு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்கு
முயற்சி செய்யுங்கள். ஆனால், நமது சமூகத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில், க.பொ.த. சாதாரண, உயர் தரப் பரீட்சைகளில் தனது பிள்ளை சிறந்த புள்ளிகளைப் பெற வேண்டும் என்று பெற்றோர் ஆர்வம் கொள்கின்றனர். தனது பிள்ளைக்கு ஆங்கிலம்
படிப்பிப்பதற்கு எத்தனையோ வகுப்புகள், எத்தனையோ பயிற்சி நெறிகள்
அனுப்புகின்றனர். கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்தளவு ஆர்வம் தனது பிள்ளையின் அரபு
மொழிக் கற்கைக்கு கொடுக்கப் படுவதில்லையே என்பதாகும். சிந்திப்பீர்களாக.
அரபு மொழியைக் கற்பது - ஒவ்வொரு தனி
மனிதனதும் பொறுப்பு.
அரபி மொழியைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது.
அகிலங்களுக்கெல்லாம் இரட்சகனாகிய அல்லாஹ் நம்முடன் உரையாடும் மொழியும்,
அல்லாஹ்வுடன் நாம் உரையாடும் மொழியுமல்லவா அது? நமது சமுதாயத்தில்
அரபு மொழி வெறுமனே வாசிப்பதற்கு மட்டும்தான் கற்றுக் கொள்ளப்படுகின்றன. மாறாக அதன்
கருத்துகளை விளங்கிக் கொள்ளும் வகையிலான முயற்சி செய்ய வேண்டியது ஒரு சமூகப்
பொறுப்பு. சமூகம் இதனைச் செய்ய மறந்துவிட்டதற்காக நீங்கள் ஏன் உங்கள் வாழ்க்கையினை
வீணாக்குகிறீர்கள்? வாருங்கள். அரபு மொழியைக் கற்போம். அனுதினமும் அல்லாஹ்விடம்
உரையாடுவோம். அவனது திருப்தியைப் பெறுவோம். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும்
பொருந்திக் கொள்வானாக.
தொகுப்பு:
Dr. A.A.M. Yasir,
mobile: 077-6470252.
No comments:
Post a Comment