March 31, 2019

*ஆண், பெண் கலப்பு - ஒரு இஸ்லாமியக் கண்ணோட்டம்*

*ஆண், பெண் கலப்பு - ஒரு இஸ்லாமியக் கண்ணோட்டம்*

அல்லாஹ் அந்நிய ஆண்களுக்கும் அந்நிய பெண்களுக்குமிடையே திரைமறைவு இருக்க வேண்டும் என ஏவுகிறான். ஏனெனில் அதுவே இரு சாராரது உள்ளங்களுக்கும் பரிசுத்தமானதாகும்.
_"நம்பிக்கை கொண்டோரே!....... (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கு அப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் பரிசுத்தமானது." (அல்குர்ஆன்  33:53)_

மேலும் பெண்கள் தங்கள் அழகு, அலங்காரங்களை அந்நிய ஆண்களைவிட்டும் மறைத்து வாழ வேண்டும் என ஏவுகிறான். எந்தளவுக்கு மறைவாக இருக்க வேண்டுமென்றால், தனது காலில் அணியும் சலங்கை சத்தம் கூட வெளிப்படுத்தப்படக் கூடாது என்கிறான்.
_"தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். (அல்குர்ஆன்  24:31)_

ஒரு பெண் அந்நிய ஆண்கள் நுகரும் வகையில் நறுமணங்களைப் பூசுவாளானால் அவள் ஒரு விபச்சாரிக்கு ஒப்பாவாள்.
_நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவள் ஒரு பெண் மக்கள் நுகரும் வகையில் நறுமணங்களைப் பூசிக்கொண்டு அவர்களுக்கு மத்தியில் செல்வாளானால் அவள் ஒரு விபச்சாரி ஆவாள்." (நூல்: அஹ்மத்-19212, நசாயீ-5126; தரம்: ஹசன்)_

மேலும் பெண்கள் தங்கள் குரலில் நளினம் காட்டக்கூடாது எனவும் ஏவுகிறான். ஏனெனில் அது அந்நிய ஆண்களுக்கு தவறான ஆசையை உண்டாக்கக் கூடும்.
_நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (அல்குர்ஆன்  33:32)_

மேலும் ஆண்கள் அந்நிய பெண்களின் அழகு, அலங்காரங்களை பார்க்கக் கூடாது எனவும் ஏவுகிறான்.
_“(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்கள் மர்மஸ்தானங்களை பேணிக்காத்துக் கொள்ளவும்.” (அல்குர்ஆன் 24:30)_

ஆண்கள் அந்நிய பெண்களை எதேட்சையாக பார்க்க நேரிட்டால், உடனே பார்வையை திருப்பிவிட வேண்டும், அந்தப் பார்வையைத் தொடரக் கூடாது என நபி (ஸல்) ஏவியிருக்கிறார்கள்.
_ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் (அந்நிய பெண்கள் மீது) எதேட்சையாக விழக்கூடிய பார்வையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எனது பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறு என்னைப் பணித்தார்கள்.” (முஸ்லிம்: 2159)_

மேலும் ஆண்கள் அந்நிய பெண்களை தொடுவதையும் நபி (ஸல்) தடுத்துள்ளார்கள்.
_மஃகில் இப்னு யஸார் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தனக்கு அனுமதியில்லாத ஒரு பெண்ணை தொடுவதைவிட தன் தலையில் இரும்பு ஊசியால் குத்தப்படுவதே மேலானது." (நூல்: தப்ரானி; தரம்: ஸஹீஹ்)_

ஆண், பெண் கலப்பு சம்பந்தமாக இஸ்லாம் கூறும் வறையறைகளை மீறுவது ஒரு சாதாரண குற்றமல்ல என்பதையே பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
_நபி (ஸல்) கூறினார்கள்: “ஆதமுடைய மகனுக்கு விபச்சாரத்தில் இருந்தும் ஒரு பங்கு எழுதப்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக அவனை அடைந்தே தீரும் (அந்த அடிப்படையில்): கண்கள் செய்யும் விபச்சாரம் (அன்னியப் பெண்ணைப்) பார்ப்பதாகும். நாவு செய்யும் விபச்சாரம் (அவளுடன்) பேசுவதாகும். காதுகள் செய்யும் விபச்சாரம் (அவளின் பேச்சைக்) கேட்பதாகும். கரங்கள் செய்யும் விபச்சாரம் (அவளைப்) பிடிப்பதாகும். கால்கள் செய்யும் விபச்சாரம் (அவளை நோக்கி) நடந்து செல்வதாகும். உள்ளம் அவளை அடைய ஆசைப்படுகிறது. மர்மஸ்தானம் (ஒன்றில்) அதனை உண்மைப்படுத்தும் அல்லது பொய்ப்பிக்கும்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம்)_

இந்த வகையில் இன்று எமது சமூகத்தில் வீடுகள், பள்ளிவாசல்கள், வரவேற்பு மண்டபங்கள், கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள் என எல்லா இடங்களிலும் ஆண், பெண் கலப்பு சம்பந்தமாக இஸ்லாம் கூறும் வறையறைகளை நடைமுறைப்படுத்துவது ஒரு சமூகக் கடமையாகும். அதிலும் குறிப்பாக வைத்தியசாலைகளில் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் துறைக்கு *பெண் வைத்தியர்களை உருவாக்குவது நீண்ட காலமாக கைவிடப்பட்டிருக்கின்ற ஒரு சமூகக் கடமையாகும்.*

யா அல்லாஹ்! சமூகத்திலுள்ள இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து எங்களுக்கு அருள் புரிவாயாக. ஆமீன்.

*தொகுப்பு:*
Dr. A.A.M. YASIR (AASIR) (MBBS),
GALHINNA.
0776470252

No comments:

Post a Comment